இளமை .நெட்: நீங்கள் இதில் ‘ஜீரோ’வா..?

By S.VENGADESHWARAN - April 15, 2017


ஃபிட்னஸ் உலகில் ‘சைஸ் ஜீரோ’ என்பது பலருக்கு இலக்காக இருப்பது போல, இணைய உலகில் ‘இன்பாக்ஸ் ஜீரோ’ என்பதும் விரும்பத்தக்க இலக்காக இருக்கிறது. சைஸ் ஜீரோ என்பது கொடியிடை போன்ற உடலைப் பெறுவது என்றால், இன்பாக்ஸ் ஜீரோ என்பது, இமெயில் பெட்டியைத் திறம்பட நிர்வகிப்பதாகும்.
மெர்லின் மன் எனும் வல்லுநர், இமெயில் சுமையைக் குறைக்கும் நோக்கத்துடன், இன்பாக்ஸ் ஜீரோ கருத்தாக்கத்தை முதலில் முன் வைத்தார். இமெயில் பெட்டியை எப்போதும் காலியாக வைத்திருப்பதாக இது புரிந்துகொள்ளப்பட்டாலும், பூஜ்ஜியம் என்பது இமெயில் எண்ணிக்கையைக் குறிக்கவில்லை, மாறாக, இமெயிலை சரிபார்க்க ஒருவர் செலவிட வேண்டிய நேரத்தைக் குறிக்கிறது என்கிறார் மன்.
ஐந்து உத்திகள்
அதாவது இமெயில் வந்திருக்கிறதா என சரிபார்ப்பதிலும், அவற்றுக்குப் பதில் அளிப்பதிலும் நேரத்தைச் செலவிட்டுக்கொண்டு, மற்ற முக்கிய வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, இமெயில் பெட்டியைப் பராமரிக்க வேண்டும் எனும் எண்ணம் மூளையில் பூஜ்ஜியமாக இருக்க வேண்டும் என்கிறார் மன்.
இதற்காக அவர் டெலீட், டெலிகேட், ரெஸ்பாண்ட், டிஃபர், டூ எனும் ஐந்து வழி உத்தியைப் பரிந்துரைக்கிறார். அதாவது முக்கியமற்ற மெயில்கள் எனில் அவற்றை அழிப்பது (டெலீட்), மற்றவர்களால் பதில் அளிக்கக் கூடிய மெயில்கள் எனில் அதை அவர்களுக்கு அனுப்பி வைப்பது (டெலிகேட்), சில நிமிடங்களில் பதில் அளிக்கக் கூடிய மெயில்களுக்கு உடனடியாக பைசல் செய்வது (ரெஸ்பாண்ட்), மற்றும் கூடுதல் நேரம் தேவைப்படக்கூடிய மெயில்களை பின்னர் பார்த்துக்கொள்ளலாம் எனத் தள்ளிவைப்பது (டிஃபர்) என இந்த வழிகள் அமைகின்றன. 2007-ல் மன் முன்வைத்த இந்த வழிமுறை கடந்த பத்தாண்டுகளில் மிகவும் பிரபலமாகிப் பலரால் பின்பற்றப்படுகிறது. இந்த வழிமுறைகள் கிட்டத்தட்ட ஒரு இயக்கம் போலவே மாறியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
செயல்திறன் பாதிப்பு
பூஜ்ஜியம் இமெயில் வழிமுறை மூலம், இமெயில் பெட்டியை எப்போதும் தூய்மையாக வைத்திருக்கலாம் என்றாலும், உண்மையில் இதுவும்கூட, நேரத்தை வீணடிக்கும் ஒரு செயல்தான் என்கிறார் டேன் ஏரிலி. உளவியல் மற்றும் நடத்தை தொடர்பான ஆய்வுகளில் வல்லுந‌ரான பேராசிரியர் ஏரிலி, அன்றாட வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் பல விஷயங்கள் குறித்து ஆய்வு செய்து முடிவெடுப்பது தொடர்பான பல நுணுக்கங்களைத் தனது புத்தகம் மூலம் புரிய வைத்திருக்கிறார்.
ஏரிலி இப்போது இமெயில் பிரச்சினை பக்கம் தனது பார்வையைத் திருப்பியிருக்கிறார். இமெயில்களை சரி பார்க்க நேரம் ஒதுக்கி, அவற்றை அடிக்கடி பைசல் செய்வது எதையோ செய்து முடித்த திருப்தியை அளித்தாலும், இதற்காக நாம் செய்யும் பிரயத்தனங்கள், நாம் செய்து முடிக்க வேண்டிய இதர முக்கிய‌ வேலைகளுக்கான நேரத்தை எடுத்துக்கொள்கிறது என்கிறார் ஏரிலி.
நீண்ட கால நோக்கில் பார்த்தால்
இமெயில் பெட்டியை காலியாக வைத்திருப்பது யாருக்கும் மகிழ்ச்சி தரப்போவதில்லை என்கிறார் அவர். இது தரும் உடனடி திருப்தியை விரும்புவதால்தான் பலரும் இதைப் பின்பற்று கின்றனரே தவிர, இதனால் செயல்திறனோ, மகிழ்ச்சியோ அதிகரிக்க வாய்ப்பில்லை என்கிறார் அவர்.
அதற்காக இமெயில் பிரச்சினையைக் கவனிக்காமல் விட்டுவிட முடியாது என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். பலரால் நாடப்படும் வல்லுந‌ர் என்ற முறையில், தினந்தோறும் நூற்றுக் கணக்கான மெயில்கள் பெறக்கூடியவராக இருப்பதால் தனிப்பட்ட முறையிலும் இந்தப் பிரச்சினையை அவர் உணர்ந்தே இருக்கிறார். இமெயில்களைப் படித்து பதில் அளிப்பதிலேயே கணிசமான நேரத்தைச் செலவிடுவது செயல்திறனை பாதிப்பதாக அமைகிறது என்றும் அவர் கூறுகிறார். இமெயிலின் தற்போதைய அமைப்பே இதற்குக் காரணம் என்றும் அவர் கூறுகிறார். அதாவது முக்கியமானதோ இல்லையோ, ஒவ்வொரு புதிய இமெயிலும் நமது கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருப்பதுதான் இமெயில்களைச் சிறப்பாக நிர்வகிக்க முடியாமல் செய்கிறது என்கிறார்.
இரண்டு தீர்வுகள்
ஆனால் செயல்திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்திவரும் ஏரிலி, சும்மா குற்றம் சாட்டுவதற்காக மட்டும் ஒரு பிரச்சினையைக் கையில் எடுப்பவர் அல்ல. விரிவான ஆய்வைச் செய்து நடைமுறையில் பயன் அளிக்கக் கூடிய தீர்வுகளை அளிப்பதுதான் அவரது நோக்கமாக இருக்கிறது. அந்த வகையில் இமெயில் பிரச்சினைக்கும் இரண்டு புதிய தீர்வுகளை அவர் முன் வைத்திருக்கிறார்.
முதல் தீர்வு, ‘ஃபில்டர்’ எனும் இமெயில் வடிகட்டி. செயலி வடிவிலான இந்தத் தீர்வு எல்லா மெயில்களும் சமமானவை அல்ல எனும் கருத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கிறது. எல்லா மெயில்களும் நம்மைக் குறுக்கிட்டுக் கொண்டிருக்க வேண்டுமா எனக் கேட்கிறார் ஏரிலி. மேலதிகாரியிடமிருந்து வரும் மெயிலைப் போலவே, மின்வணிக நிறுவனத்தின் விளம்பர மெயில் முக்கியமானதா என்று கேட்கிறார்.
ஆக, உடனடியாகப் பதில் அளிக்க வேண்டிய மெயில்களை அறிந்து அதற்கேற்பச் செயல்படும் வழியில் ஃபில்டர் (Filtr) செயலி உருவாக்கப் பட்டுள்ளது. இந்தச் செயலியை நிறுவிய பின், முக்கியமானவர்களைக் குறிப்பிட்டு, அவர்கள் மெயில்களை உடனடியாக பதில் அளிக்க வேண்டியவை என வகைப்படுத்திக் கொள்ளலாம். இதே முறையில், அன்றைய தின முடிவில் பதில் அளிக்க வேண்டிய மெயில்கள், சில நாட்கள் காத்திருக்கக் கூடியவை, ஒரு வார காலம் காத்திருப்பவை எனப் பல வகையாகப் பிரித்துக் கொள்ளலாம். இப்படிச் செய்வதன் மூலம் இமெயில் நிர்வாகத்திற்கு என்று தனியே நேரம் ஒதுக்காமல், மெயில்களை அவற்றின் முக்கியத்துவத்திற்கு ஏற்பக் கையாளலாம். ஐபோன்களில் செயல்படும் வகையில் இந்தச் செயலி அமைந்துள்ளது.
இரண்டாவது தீர்வான ‘ஷார்ட்வேல்’ இன்னும் கொஞ்சம் சுவாரசியமானது. இணையத்தைப் பயன்படுத்தும், இந்தச் செயலியைப் பயன்படுத்தும் நபர்களுக்கு, இமெயில் அனுப்பி வைக்க விரும்புகிறவர்கள் அதற்கு முன் சில கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். இதற்கென தனி இணையப் பக்கம் தோன்றி அதில் கேள்விகள் தோன்றும். இந்த மெயில் எந்த அளவு அவசரமானது, இதற்குப் பதிலை எதிர்பார்க்கிறீர்களா என்பன‌ போன்ற கேள்விகளுக்கு மெயில் அனுப்புகிறவர்கள் பதில் அளிக்க வேண்டும். அதற்கேற்ப மெயில்கள் பயனாளிகளின் மெயில் பெட்டியில் எட்டிப்பார்க்கும். மெயில்களை வகைப்படுத்தப்பட்டுள்ள முறையை வைத்து எளிதாக அவற்றை பைசல் செய்யலாம்.
இமெயில் அனுப்புவதற்கு முன்னர், இப்படிக் கேள்விகள் கேட்பது கொஞ்சம் அதிகப்படியான விஷயமாகத் தோன்றலாம். ஆனால், ஏரிலி தனது வலைப்பதிவு வாசகர்கள் மத்தியில் ஆய்வு நடத்திய பிறகே இந்த வழியைத் தீர்மானித்திருக்கிறார். இந்த ஆய்வின்போது தனது வாசகர் களிடம், அவர்களுக்குக் கடைசியாக வந்த 40 மெயில்களில் எத்தனை உடனடியாகப் பதில் அளிக்க வேண்டியவை எனக் கேட்டிருந்தார். வாசகர்கள் தந்த‌ பதில்களின் அடிப்படையில் பத்து மெயில்களில் ஒன்று மட்டுமே உடனடியாக பதில் அளிக்க வேண்டியவையாக இருப்பதைக் கண்டறிந்தார்.
இதனடிப்படையில்தான் மெயில் களுக்குத் தேவைப்படும் கவனத்தை முதலிலேயே தீர்மானிக்க வழி செய்யும் கேள்விகளைக் கொண்ட ஷார்ட்வேல் சேவையை உருவாக்கியுள்ளார். ஷார்ட்வேல் சேவை எல்லா முன்னணி இமெயில் சேவைகளுடனும் செயல்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கென தனியே எந்த மென்பொருளையும் நிறுவ வேண்டியதில்லை. எண்ணிக்கையிலும், அளவிலும் குறைந்த மெயில்கள் எனும் பலனை இதன் மூலம் பெறலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏரிலியின் கருத்துகளும், அவர் உருவாக்கிய சேவைகளும் நிச்சயம் நீங்கள் இமெயிலைப் பயன்படுத்தும் விதம் பற்றி யோசிக்க வைக்கும்.
சேவைகளை அணுக: http://www.shortwhale.com/ - http://getfiltrapp.com/


  • Share:

You Might Also Like

0 comments